Print this page

தீபாவளி - முட்டாள்தனம். குடி அரசு - அறிக்கை - 15.10.1933 

Rate this item
(0 votes)

தோழர்களே! 

தீபாவளி கொண்டாடப்போகிறீர்களா? அதன் கதை தெரியுமா? பகுத்தறிவுள்ள மனிதனுக்குப் பிறந்தவர்களாய் இருந்தால் இம்மாதிரி இழிவும், பழிப்பும், முட்டாள் தனமுமான காரியத்தைச் செய்வீர்களா? தீபா வளியை விளம்பரம் செய்கின்றவர்கள் யார்? சோம்பேறியும், துரோகியும், அயோக்கியர்களுமான கழுகுக் கூட்டமல்லவா? 

கதர் கட்டினால் தான் சரியான தீபாவளி என்று பல சுயநல சூக்ஷிக் காரர்கள் சொல்லுகிறார்கள். இது மகா மகா பித்தலாட்டமாகும். இதற்கும் பார்ப்பன அயோக்கியர்களுடன் அரசியல் அயோக்கியர்களும் சேர்ந்து அனுகூலமாயிருந்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சொன்னதை எல்லாம் கேட்பதுதானா பார்ப்பனரல்லாத மக்களின் நிலை? மலம் சாப்பிட்டால் மோக்ஷம் வரும் சுயராஜ்யம் வரும் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடுவதுதான் மததர்மமா? தேசீய தர்மமா? மதத்துக்காக மாட்டு மலம் சாப்பிடுவது போல் அரசியலுக்காக பணத்தை வீணாக்குவதா? சென்னையில் தீபாவளிக்கும். கதருக்கும் செய்யப்பட்டி ருக்கும் விளம்பரம் குச்சிக்கார தாசி விளம்பரத்தையும் தோற்கடித்து விடும் போல் காணப்படுகின்றன. இந்த செலவுகள் யார் தலையில் விடியும் தெரியுமா? புத்தி இருந்தால் பிழைத்துக்கொள்ளுங்கள். 

கோபிப்பதால் பயனில்லை. 

குறிப்பு: ஒவ்வொரு சு.ம.சங்கத்திலும் நாளையே தீபாவளியைப் பற்றி பொதுக்கூட்டம் கூட்டி மக்களுக்கு தீபாவளிப்புரட்டையும் கதர் புரட்டையும் எடுத்துச் சொல்லக் கோருகிறோம். 

குடி அரசு - அறிக்கை - 15.10.1933

Read 99 times